விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை ஓரபகுதியான கோட்டக்குப்பம் மரக்காணம் பகுதிகளில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் நிவர் புயலினால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பொதுமக்களிடம், நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் இப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அந்த பாதுகாப்பு மையங்களுக்குச் சென்று தங்கிக்கொள்ளலாம். அங்கு உணவு, மின்சார வசதி, குடிநீர் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இது மட்டுமில்லாமல் கடற்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அரசு பள்ளிகள் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். எனவே புயலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மீனவர்கள் பொதுமக்கள் ஆகியோர் தேவையின்றி வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கு உதவி தேவை என்றால் பாதுகாப்பு படையினரை உடனே தொடர்பு கொள்ளலாம் .அதற்கான தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் பணியாளர்கள் அந்தந்த கிராமங்களிலேயே தங்கியிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் அவசர உதவி தேவை என்றால் தொடர்புகொண்டு கேட்கலாம். இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்பதை மீனவ மக்களிடம் எடுத்துக் கூறினார் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகளுக்காக சென்றுகொண்டிருந்தபோது மரக்காணம் அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் கிராமம் கடற்கரையை ஒட்டி உள்ளது புயல் தாக்கினால் நாங்கள் பாதிக்கப்படுவோம். எனவே எங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனே மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அப்பகுதி மக்கள் வாழும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டதோடு, அனைத்து உதவிகளையும் அந்த மக்களுக்கு உடனுக்குடன் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிட்டார். கடற்கரையோர மாவட்டங்களான கடலூர் விழுப்புரம் மயிலாடுதுறை நாகை உட்பட பல மாவட்ட ஆட்சியர்கள் நிவர்புயல் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.