கால்நடைகளுக்கு கோமாரி நோய் வருவதை தடுக்க பாரம்பரிய உணவுகளை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும் என சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கால்நடை மருத்துவர் வேண்டுகோள் விடுத்தார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் தடுப்புமுறைகள் குறித்து கால்நடை மருத்துவர் மணிகண்டன் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "கால்நடைகளுக்கு பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, பசுந்தீவனங்களை வழங்க வேண்டும். பாரம்பரிய உணவுகளான கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் இருந்து கிடைக்கக்கூடிய தட்டைகளை வழங்க வேண்டும். மேலும் நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை வழங்க வேண்டும் எனவும் ரேசனில் வழங்க கூடிய அரிசிகளை பொங்கி மாடுகளுக்கு வழங்குவதன் மூலம் வயிறு கோளாறு மந்தம் ஏற்படும் மலச்சிக்கல் ஏற்படும். எனவே நார்ச்சத்து மிகுந்த உணவுகளை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இக்கூட்டத்திற்கு கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ரெ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டார். வார்டு உறுப்பினர்கள் வேம்பு வேலுமணி, மூக்காயி ரவி,பவளக்கொடி பழனிச்சாமி, மணிவேல் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.