இந்திய பிரதமராக ராஜீவ் காந்தி பதவியில் இருந்தபோது பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் ஒரு பிரிவாக கிராம சபா கூட்டம் நடத்துவது என்கிற கருத்தாக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த கிராம சபைக் கூட்டத்தின் நோக்கம் கிராமத்தில் மத்தில் உள்ள பொதுமக்களின் 80% பேர் இணைந்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினால் அந்த தீர்மானமே இறுதி முடிவானது. உச்சநீதி மன்றங்கள் கூட இதில் தலையிட முடியாது, தலையிடுவதும்மில்லை. மக்கள் தங்களுக்குத் தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளும் உரிமையை இந்த கிராம சபை க்கூட்டம் வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, மே 1 , ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆம் தேதிகளில் இந்த கிராமசபை கூட்டங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது. இதனை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து கண்காணிப்பார்கள்.
இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ந்தேதி கிராமசபை கூட்டங்கள் எல்லாக் கிராமங்களிலும் நடைபெற்றது. இந்த கிராம சபா கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ரஜினியின் மக்கள் மன்றம் தலைமையும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும் , கிராமசபை கூட்டங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் கலந்து கொள்ள வைத்து உங்களது உரிமையும் நிலைநாட்ட அழைத்து வரவேண்டும் என தங்களது அமைப்பு மற்றும் கட்சியினருக்கு உத்தரவிட்டனர். அதன்படி எல்லா மாவட்டங்களிலும் இந்த இரண்டு அமைப்பினரும் பல கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இதில் வேலூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றத்தின் விழிப்புணர்வு பிரச்சாரம் வித்தியாசமாக இருந்தது. அதாவது கடந்த சில தினங்களாக கிராமசபை கூட்டங்கள் தொடர்பாக அதில் மக்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், கிராமசபை கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் எந்த அளவுக்கு வலிமையானது என்றும் நோட்டீஸ் அச்சடித்து கிராமங்களில் வழங்கினர். இன்று அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு வேலூர் மாவட்டம், சோளிங்கர் ஒன்றியம், மேல்வெங்கடாபுரம் ஊராட்சியில் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் நாட்டுப்புற கலைஞர்களின் ஆடல் பாடல் மூலம் கிராமசபை கூட்டத்தில் கலந்து கண்டுகொள்ள ஊர்வலமாக சென்றனர். அதோடு ஊர்வலத்தில் சிறு சிறு தட்டிகளில் கிராம சபா கூட்டம் பற்றிய வாசகங்களை எழுதி மக்கள் மன்றத்தினர் கொண்டு சென்றனர். கூட்டத்தில் பெண்கள் அதிக அளவு வந்து கலந்து கொள்ள வேண்டும் என ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களையும் அழைத்து வந்து கூட்டத்தில் பங்குபெற வைத்தனர்.
கிராமசபை கூட்டங்கள் பற்றி மாவட்ட செயலாளர் ரவி, கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள கிராம சபா கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவ்வளவு மகத்துவம் வாய்ந்த கிராம சபா கூட்டங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே நாங்கள் இந்த ஏற்பாடுகளை செய்தோம், அடுத்து வரும் கிராமசபை கூட்டத்துக்கு வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஒன்றிய கிராம ஊராட்சிகளிலும் அப்பகுதியில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கிராம கைவினை பொருட்களான துணிப்பை, இயற்கை மணம் வீசும் மண் குவலைகளில் மோர், இயற்கை பானமான இளநீர், பசுமை காக்க மரக்கன்றுகள் போன்றவைகளை வழங்கி அதனால் நமக்கு கிடைக்கும் நற்பண்புகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்புகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராமவாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் உதவும் வகையில் முடிந்த வரை இயற்கை பொருட்களையே பயன்படுத்துவோம் என்றும் ரஜினி மக்கள் மன்றம் மூலமாக கிராம பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த செயல்களைப்பார்த்து இந்த பகுதியை சேர்ந்த அதிமுக, திமுக, பாமக போன்ற பெரும் அரசியல் கட்சிகள் வித்தியாசமான ரஜினி மக்கள் இந்த முயற்சிகளை பார்த்து கவலையில் உள்ளனர்.