நெல்லை மாவட்டத்தின் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை செல்கிற மூன்றடைப்பு அருகிலுள்ள ஆயநேரி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி, மீன் வியாபாரம் செய்து வருபவர். அவருக்கு ராசம்மாள் மாரியம்மாள் என இரு மனைவிகள், நீலாவதி, செல்வி என இரு மகள்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல் பாண்டி தன் இரு சக்கர வாகனத்தில் மீன் வியாபாரத்திற்குச் சென்றார். ஆயநேரி குளக்கரையை ஒட்டிய நான்கு வழிச்சாலையில் அவர் வரும் போது, கன்னியாகுமரியை நோக்கிச் சென்ற டிரக்கர், பாண்டியின் மீது மோதியதில் டூவீலரோடு தூக்கி வீசப்பட்ட பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். பீதியாகிப் போன டிரக்கரை ஓட்டிவந்த டிரைவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தையடுத்த சம்பாபேடு கேசன் நகரைச் சேர்ந்த ரமேஷ்கவுடு, உடன் வந்த சுற்றலா பயணிகளான சிவகுமார் கவுடு, சாய் தேஜாச்சாரி ஆகியோர் சேர்ந்து பாண்டி உடலையும் அவரது டூவீலரையும் சாலையோரமுள்ள முட்பதரில் வீசிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார்கள்.
ஆனால் டிரக்கர் பழுதானதால் அவர்கள் அங்கிருந்து தப்பமுடியவில்லை. அந்த வழியாக வந்தவர்கள் தகவல் தர ஸ்பாட்டுக்கு வந்த மூன்றடைப்பு போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட போது டிரக்கரில் வந்தவர்கள் பழுது காரணமாக நிற்பதாக தெரிவிக்க, அதனை ஆராய்ந்த போலீசாருக்கு விபத்தில் வாகன சேத அடையாளம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சாலையில் சிதறிகிடந்த மீன்களும் சந்தேகத்தைக் கிளப்ப பயணிகளைக் காவல் நிலையம் அழைத்து வந்திருக்கிறனர்.
போலீசாரின் முறைப்படியான விசாரணையில் விபத்தை மறைக்க முயன்றதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகே புதரில் கிடந்த பாண்டி உடலையும், டூவீலரையும் கைப்பற்றினர் போலீசார். பாண்டி உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், வழக்குப்பதிவு செய்து தெலங்கானா மாநிலத்தில் ரமேஷ்கவுடு, தேஜாச்சாரி சிவகுமார் கவுடு மூவரையும் கைது செய்தார்.