கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களுடைய பகுதியில் நடைபெறும் குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்து வந்தனர்.
அப்போது உளுந்தூர்பேட்டை அருகே ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் அய்யம்பெருமாள் என்பவர், ‘எம்.பில் படித்த பட்டதாரியான நான் கடந்த ஒரு வருடமாக மனு அளித்து வருகிறேன். அந்த மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என ஆவேசமாக கூறியும், ‘நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் எதற்கு?, அதிகாரிகள் எதற்கு? இந்த கூட்டம் எதற்கு?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பி மனுவின் நகலை தூக்கி எறிந்ததால் விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது ஆட்சியர், ‘உங்களின் தனிப்பட்ட கோரிக்கைகளை கூறுங்கள். அதற்கான நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்’ எனச் சொன்ன போது, தான் அளித்த மனுவின் மீது நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மறுபடியும் ஆவேசமாக தெரிவித்ததால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் அங்கு அமர்ந்திருந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் நடைபெறும் குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர், ஆனால், ஆட்சியர் சாதாரணமாக பதில் அளித்ததால் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.