Skip to main content

“பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்” - சீமான் வலியுறுத்தல்

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
“Graduate teacher exam should be postponed” - Seaman insists

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகத் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி (25.10.2023) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த தேர்வின் மூலம் 2,222 பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ் பாடப்பிரிவில் 394 பேரும், ஆங்கில பாடப்பிரிவில் 252 பேரும், கணிதத்தில் 233 பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 292 பேரும் என மொத்தம் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது மட்டுமின்றி வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

அதே சமயம் ஜனவரி 7ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், இந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், ‘ஜனவரி 7ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் (B.T / BRTE) தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதிக்கு (04.02.2024) ஒத்தி வைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களிலும் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு ஜனவரி மாதம் 7ஆம் நாள் (07.01.2024) நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் (B.T/BRTE) தேர்வானது, பிப்ரவரி மாதம் 4ஆம் நாள் (04.02.2024) அன்றைக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

இவ்வறிவிப்பின் மூலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் நெருக்கடிக்கு உள்ளாகாமல் தேர்வு எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் வழிவகுத்துள்ளது. அதே சமயம் வடமாவட்டங்களைப் போலவே கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் (B.T/BRTE) தேர்வினை ஒத்திவைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இத்தகைய பாகுபாட்டால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கனமழையால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே, தென் மாவட்டங்களிலும் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வினை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உடனடியாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டு தேர்வர்களின் நலன் காக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்