நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா ஜெயசெல்வி என்பவர் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இந்த பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளிடம் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கம் போல், ஒரு மாணவியிடம் அவதூறாக பேசியுள்ளார். இதனால், மனமுடைந்து போன அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பள்ளித் தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் இது குறித்து புகார் அளித்தனர். இது போன்று தொடர் புகார் வருவதால், இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி தலைமை ஆசிரியை, ஸ்டெல்லாவிடம் கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை ஸ்டெல்லா, தலைமை ஆசிரியையை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் கழுத்தில் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியையும் ஸ்டெல்லா பறித்துள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர், ஸ்டெல்லாவிடம் இருந்த தங்கச் சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியை ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.