தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரம் அருகேயுள்ள கிளவிபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்பகுதியின் 33 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசியர்கள் பணியில் உள்ளனர்.
இந்நிலையில் பள்ளியின் கழிவறையைச் சுத்தம் செய்ய மாணவர்களையே தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்து கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும் ஆசிரியர்கள் தாங்கள் கழிவறையைப் பயன்படுத்துவதற்காக மாணவர்களைத் தண்ணீர் எடுத்து வரச் சொன்னதாகவும் தெரிகிறது. மாணவர்களை அவதூறாகத் திட்டி வருவதாகவும், ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் செல்போனில் வீடியோ கேம் ஆடி வருவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன. இவை மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிய வர, ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இணைந்து பள்ளியைப் பூட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களை பள்ளிக்குள் விடாமல் போராட்டக் குரல் எழுப்பி வருகின்றனர்.
கோவில்பட்டி தொடக்கக் கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு, மற்றும் வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆரம்ப பள்ளி மாணவர்களின் இந்தப் போராட்டம் நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.