![Ladakh](http://image.nakkheeran.in/cdn/farfuture/mCzoKzaDTwDjhdXPeVMV-raTxz5e5OYi8pBsFpuaZaY/1592302689/sites/default/files/inline-images/Ladakh.jpg)
கடந்த சில வாரங்களாகவே எல்லையில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்திய ரானுவத்தின் உயரதிகாரி ஒருவரும் இரு வீரர்களும் சீன ரானுவத்தினால் கொல்லப்பட்ட செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில் வீர மரணமடைந்தவர்களில் ஒருவர் ராமநாதபுர மாவட்டத்தினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் எல்லைக்கு அருகில் ராணுவ விமான தளம், 66 முக்கியச் சாலைகளை இந்தியா நிர்மாணிப்பதால் கோபமுற்ற சீனா, இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கில் படைகளைக் குவித்து வந்தது. பதிலுக்கு இந்தியாவும் தனது துருப்புகளைக் குவிக்க எல்லையில் பதட்டம் நிலவி வந்தது. இந்நிலையில், இருதரப்பினை சேர்ந்த ரானுவ அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தி பதட்டம் தனிந்ததாக ஊடகத்திற்குச் செய்தியினை வெளியிட்ட வண்ணமிருந்தனர். இவ்வேளையில், இன்று உயரமிகுந்த பனி சிகரமான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய ரானுவத்தின் கர்னல் நிலை அதிகாரி மற்றும் இரு ரானுவ வீரர்களும் சீனப்படையினரால் கொல்லப்பட்டதாகச் செய்தியினை வெளியிட்டிருந்தது இந்திய ரானுவம்.
இதில் வீர மரணமடைந்த மூவரில் ஒருவர் ராமநாதபுர மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகனான பழனி என்பவர். இந்திய ரானுவத்தில் ஹவில்தாரராகப் பணிபுரியும் இவருக்கு வானதி தேவி என்ற மனைவியும் பிரசன்னா (வயது 10) என்கின்ற ஆண் குழந்தையும் திவ்யா (வயது 7) என்கின்ற பெண் குழந்தையும் உள்ளது. வீர மரணமடைந்த பழனியின் இறுதிச்சடங்கு திருவாடானை தாலுகா கடுக்கலூர் கிராமத்தில் அவர்கள் இல்லத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பழனியின் மரணம் இப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதே நிதர்சனம்.