கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட பள்ளிகளை விட மூடப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் 46 பள்ளிகளை மூடி சாதனை படைத்துள்ளது தமிழக அரசு.
ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர், அரசுப் பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சில ஆசிரியர்களுக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்களே சாட்சியாக உள்ளது. அதாவது 2 மாதம் முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் மாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமணி சுய விருப்பத்துடன் பச்சலூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு இடமாறுதல் பெற்று செல்கிறார். கடைசி நாளில் பள்ளியில் மாணவர்களிடம் சொல்லும் போது தலைமை ஆசிரியர் குமுறி குமுறி அழுகிறார். சக ஆசிரியர்களும் அழுகையை அடக்க முடியாமல் கதறி அழுகிறார்கள். 200 மாணவ, மாணவிகளும் தேம்பி தேம்பி அழுகிறார்கள். இதைப் பார்த்த கல்வித்துறை அதிகாரிகள் ஒரு ஆசிரியர் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும். அப்படி உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூட்டங்களில் பேசிவந்தார்கள்.
ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலதிருப்பந்துருத்தி கிழக்கு கிராமத்தில் உள்ள 70 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தார்கள். ஆனால் தற்போதைய நிலை வெறும் 50 மாணவர்கள். அவர்களும் தனியார் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப வசதியில்லாத தினக் கூலிகளின் குழந்தைகள்.
ஏன் இப்படி இத்தனை குழந்தைகள் வேகமாக குறைந்தார்கள் என்ற நமது கேள்விக்கு அந்த கிராம மக்கள் சொல்லும் பதில், அந்தப் பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர்தான் காரணம் என்கிறார்கள். ஏன்? என்ற கேள்விக்கு, அந்த ஆசிரியர் குழந்தைகளை கொடூரமாக தாக்குவது, கேட்கப் போகும் பெற்றோரை ஒருமையில் பேசுவது என்பதில் தொடங்கியது. பிறகு பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை காணவில்லை. ஆண்டுவிழா நிதி வாங்கி நடத்துவதில்லை. பிஞ்சுக்குழந்தைகளிடம் பேசக் கூடாத வார்த்தைகளில் பேசுவது. பொங்கல் – தீபாவளிக்கு மட்டுமல்ல பிறந்த நாளுக்கு சக மாணவர்கள் வாழ்த்துச் சொல்லிக் கொண்டால் அவர்களை திட்டுவது, தாக்குவது இப்படியே செய்வதால படிப்படியாக இல்ல.. வேகமாகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாற்றுப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.
சில மாதத்திற்கு முன்பு செருப்பு காலால உதைச்சு ஒரு மாணவி கண் கலங்கிடுச்சு. போய் கேட்டா அப்படித்தான் செய்வேன்னு தெனாவட்டு பதில். நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்தும் பயனில்லை. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்லி அலுவலர், இப்படி எல்லா அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தும் பயனில்லை.
அதிகாரிகளுக்கு எப்படி எல்லாம் தெரியப்படுத்தனுமோ அத்தனை வழிகளிலும் தெரியப்படுத்தியாச்சு. இனியும் எங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேற வழியில்லை அதனால் 4 ந் தேதி முதல் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை பெற்றோர்கள் எடுத்திருக்கிறோம். அந்த முடிவையும் கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சொல்லியாச்சு. நீங்கள் குழந்தைகளை வேண்டுமானால் நிறுத்திக் கொள்ளுங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது போல பெற்றோர்களை அழைத்து பேசக் கூட இல்லை. அதனால் திட்டமிட்டபடியே எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தப் போறோம். எங்களுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.. அதாவது தமிழ்நாட்டில் ஒவ்வொரு பள்ளியாக மூடி வருகிறார்கள். அதற்கு மாணவர்கள் இல்லை, சேர்க்கை இல்லை என்று காரணமும் சொல்கிறார்கள். ஆனால் எங்கள் ஊரைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது. மாணவர்கள், பெற்றோர்களுக்கு எதிரான ஆசிரியர்களை வைத்தே மாணவர்களின் எண்ணிக்யை குறைத்து பள்ளிகளை மூட திட்டமிட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் தான். அதனால தான் புகார் பதிவாகியும் கூட நடவடிக்கை இல்லை என்றனர். ஏற்கனவே சொன்னப்படி இன்று பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவில்லை.
இந்த நிலையில் பெற்றோர்கள் குற்றச்சாட்டுக்கள் குறித்து சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களை தொடர்புகொண்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் பதில் அளித்தால் அதனை பதிவு செய்ய காத்திருக்கிறோம்.