பொங்கல் திருநாளின் முதல் நாளான போகியை முன்னிட்டு நேற்று முன் நாள் உழவர்கள் தங்கள் நிலங்களிலும், வீடுகளில் மாவிலை, பூலாப்பூ, ஆவாரம் பூக்களால் காப்பு கட்டினர். இன்று (15.01.2020) பொங்கலை முன்னிட்டு வாசலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டனர். குடும்பத்தோடு ‘பொங்கலோ…. பொங்கல்…’ ‘பொங்கலோ… பொங்கல்’ என உற்சாகமாக குலைவையிட்டு கொண்டாடினர்.
நாளை பொங்கல் திருவிழாவின் மூன்றாவது நாள் விழாவான மாட்டுப்பொங்கல் எனப்படும் உழவர் திருநாள் விவசாயிகளால் விமரிசையாக கொண்டாடப்படும். உழவர்கள் தங்களின் உழவு தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான நாள் இது. மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளில் வர்ணம் தீட்டி, சலங்கையுடன், புதிய கயிறு கட்டி, பொட்டு வைத்து, அலங்கரித்து விவசாயிகள் வணங்குவது வழக்கமாகும். அதற்காக மாடுகளுக்கான கயிறுகள், சலங்கைகள் விற்பனை களை கட்டியுள்ளது. விவசாயிகள் பலரும் ஆர்வத்துடன் மாடுகளுக்கு கட்டும் தலை கயிறு, கை கயிறு, மூக்கணாங்கயிறு, நெற்றி கயிறு, சங்கு கயிறு, சலங்கை கயிறு, கருப்புக் கயிறு, , சலங்கைகள், ஜாட்டி கோல், சங்கு பூ போன்றவற்றை வாங்கி செல்கின்றனர்.
கயிறுகளை மாடுகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் மாடுகளுக்கு ஏற்படும் குந்து படுதல், கோமாரி, உணவு கொள்ளாமை உள்ளிட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.
தற்போதைய நவீன வாழ்க்கை கிராமப்புற வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கல் பண்டிகை இன்றளவும் பழமை மாறாமல் கொண்டாடப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.