தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.