Skip to main content

அரசு பேருந்து ஓட்டுநருக்கும் தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் அடிதடி!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Govt bus driver and private bus driver beaten

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி நடந்து வருவதால் தற்காலிக பேருந்து நிலையம் கழுகுமலை இணைப்புச் சாலையில் இயங்கி வருகிறது. நேற்று(21.11.2023) மாலை அரசு பேருந்து ஒன்று திருநெல்வேலி செல்வதற்காக மாலை 5.15 மணியளவில் புறப்பட்டது. அதே சமயம் தனியார் பேருந்து ஒன்றும் 5.25 மணியளவில் புறப்படுவதாக இருந்தது. 5.15 மணிக்கு அரசு பேருந்தை எடுத்த டிரைவர் குமார், அந்நேரம் ஒரு பயணிவர, அவரை ஏற்றிக் கொள்ள பேருந்தை நிறுத்தியுள்ளார். 

 

அது சமயம் தனியார் பேருந்து ஒட்டுநர் ராமர் அரசு பேருந்துக்கு முன்பாக அவரது பேருந்தை எடுத்துச் சென்று “இப்ப எங்க டைம், உங்களுக்கு டைம் முடிந்துவிட்டது” என்று புறப்படாமல் இருந்ததாக அரசு பேருந்து ஒட்டுநரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பிறகு அது கைகளால் தாக்கிக் கொள்ளும் அளவாக மாறியிருக்கிறது. அவர்கள் தாக்கிக் கொண்டதில் காலனிகளை எடுத்து தாக்கி கொண்டுள்ளனர். பதற்றமாக நீடித்த இத்தகராறால் பேருந்து நிலையம் களேபரமானது. டிரைவர்களின் தகராறை பொதுமக்கள் தடுத்தும் இரு தரப்பு தகராறும், வார்த்தைகளும் அடங்குவதாகத் தெரியவில்லை. இதனிடையே அரசு பேருந்து ஒட்டுநர் குமார் கீழே விழ அவரை மீட்ட போக்குவரத்து ஊழியர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

 

தொடர்ந்து மற்றப் பேருந்துகளை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அது சமயம் பேருந்து நிலையம் வந்த சங்கரன்கோவில் பணிமனை கிளை மேலாளர் குமார் மற்றும் தொமுச நிர்வாகிகள், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்தனராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றனர். இதையடுத்தே அனைத்து பேருந்துகளும் மீண்டும் இயக்கப்பட்டன. டவுன் போலீசார் சம்பவம் குறித்து தனியார் பேருந்து ஒட்டுநர் ராமரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பேருந்துகள் தரப்பட்ட நேரத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். தனியார் பேருந்துகள் விதியை மீறி செயல்படக் கூடாது. தற்காலிக பேருந்து நிலையத்தில் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என்கிறார்கள் போக்குவரத்து பணியாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்