அண்மையாகவே அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதுபட்டு சாலையில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் திருப்பத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து புளிய மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு நாட்றம்பள்ளியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கட்டேரியம்மன் கோவில் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்துக்கு நேர் எதிராக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விபத்தை தடுப்பதற்காக பேருந்து ஓட்டுநர் ஜீவா பேருந்தை சடாரென திருப்பியுள்ளார். அப்பொழுது சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் அரசு பேருந்து மோதி நின்றது. இதனால் பேருந்தின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பயணித்த பயணிகள் 18க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அரசு பேருந்து புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.