
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.