Skip to main content

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் ”- அமைச்சர் உறுதி!

Published on 28/07/2024 | Edited on 28/07/2024
Govt All assistance will be provided to the Mancholai workers Minister Thangam thennarasu assured 

திருநெல்வேலி மாவட்டம்,  அம்பாசமுத்திரம் வட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் தங்கி அங்கு பணியாற்றி வந்தனர். குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிக்கையில், “கிராமப் பகுதிகளில் குடியேற விரும்பும் வீடற்ற தொழிலாளர்களுக்கு தற்போதைய அரசு விதிமுறைகளைத் தளர்வு செய்து சிறப்பினமாகக் கருதி அவர்களின் விருப்பத்தின் பேரில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் "கலைஞர் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு தயார் நிலையிலுள்ள அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாங்குளம் கிராமத்தில் 240 அடுக்கு மாடிவீடுகள் மற்றும் திருநெல்வேலி மாநகரம், ரெட்டியார்பட்டி பகுதியில் பணி முடிவடையும் நிலையிலுள்ள அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் விருப்பமுள்ள, ஏற்கனவே வீடு இல்லாத மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி ஒதுக்கீடு செய்யப்படும்.

Govt All assistance will be provided to the Mancholai workers Minister Thangam thennarasu assured 

தொழிலாளர்களில், 55 வயதிற்குட்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த வாழ்வாதார வசதி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் (AABCS ) புதிய தொழில் தொடங்க 35% மானியம் மற்றும் 6% வட்டிச் சலுகையுடன் சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும். இதர பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் 25% மானியம் மற்றும் 3% வட்டி சலுகையுடன் அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.

தகுதியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill Development Corporation) மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மையம் (Tamil Nadu State Rural Livelihood Mission) மூலம் திறன் பயிற்சி வழங்கப்படும். திறன் பயிற்சி முடிப்பவர்களுக்குத் தனியார்த் துறையில் உரிய வேலைவாய்ப்புப் பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சிறிய பால் பண்ணைகள் அமைத்தல், கறவை மாடுகள், ஆடுகள் வாங்குதல் ஆகியவற்றிற்காக ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.

Govt All assistance will be provided to the Mancholai workers Minister Thangam thennarasu assured 

பெண்களுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ரூ.1.50 இலட்சம் வரை சிறு கடன்கள் வழங்கப்படும். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பும் அரசுப் பள்ளியில் அவர்களைச் சேர்க்கவும், அரசு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்கள் குடியேற விரும்பும் முகவரிக்கு அவர்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை சிறப்பு முகாம்கள் மூலம் சிரமமின்றி மாற்றம் செய்து தரப்படும். தொழிலாளர்களுக்கு நிறுவனம் வழங்க வேண்டிய மீதமுள்ள 75% கருணைத் தொகை நீதிமன்ற உத்தரவுபடி வழங்கிடவும், அவர்களுக்கு விதிப்படி வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ பலன்களும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திட தொழிலாளர் நலத்துறை மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்