சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத், நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வைத்த குற்றச்சாட்டை தமிழக காவல்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜீவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அருண் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். மேலும் ஆளுநர் மாளிகை முன் என்ன நடந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், “கருக்கா வினோத் தேனாம்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகைப் பகுதிக்கு நடந்து வந்தார். அவரிடம் பெட்ரோல் நிரம்பிய நான்கு பாட்டில்கள் இருந்தன. முதலில் கவரில் பெட்ரோல் பாட்டிலை எடுத்துவந்தவர், பின்னர் சட்டையினுள் மறைத்து எடுத்து வந்தார். கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை உள்ளே நுழைய முயலவில்லை. அவர் மாளிகையின் எதிர்புறம் இருந்து வீசியிருக்கிறார். ராஜ்பவன் ஊழியர்கள் சம்பவத்தை தடுத்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை. அவரைக் கைதுசெய்தது காவல்துறைதான்” என்றார்.
மேலும் டிஜிபி சங்கர் ஜிவால், “ஆளுநர் மாளிகைப் பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை. அங்கு 253 காவலர்கள் பணியில் இருக்கிறார்கள். உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முதலில் பலர் வந்து குண்டு வீசியதாகத் கூறப்பட்டது. ஆனால் அவர் தனியாகத்தான் வந்தார். ஆளுநர் மாளிகை பக்கத்தில்கூட வரவில்லை. எதிர்ப்புறத்தில் இருந்துதான் வீசினார். நான்கு பாட்டில்களை எடுத்து வந்தார், இரண்டு வெடித்தது. கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரித்த பின்னர் முழுமையான தகவல் தெரியவரும். சென்னை பாதுகாப்பான நகரம் என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது” என்றார். மேலும் ஆளுநர் தருமபுரம் சென்றபோது, கற்களாலும், தடியாலும் தாக்கப்பட்டதாக கூறியது பொய் எனவும், அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு, ஆளுநர் வாகனம் தாக்கப்படவில்லை தமிழகம் அமைதி மாநிலமாக இருக்கிறது என காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.