சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து நேற்று (25.10.2023) பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசியுள்ளார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மொத்தமாக, பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அதில், “ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது பெட்ரோல் குண்டு விழுந்துள்ளது. மது போதையில் தவறுதலாக ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது” என தெரிவித்தார்.
இந்நிலையில் இவர் மீது வெடிப்பொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று (26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.