நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள ராஜ்பவனில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைப் பல்கலைக்கழகங்களின் வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி நேற்று (27.05.2024) தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாநாட்டின் தொடக்கத் தொடக்க உரையாற்றினர். மேலும் இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறையின் செயல்பாடு, உயர்கல்வியில் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், கல்வி நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், பேராசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவித்தல் போன்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று (28.05.2024) ஆளுநர் ஆர்.என். ரவி நிறைவு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது. இது மட்டுமே வரலாறு இல்லை. தேசிய அளவிலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து தமிழக பாடப் புத்தகத்தில் இடம்பெறவில்லை. வேலுநாச்சியார், கட்டபொம்மன் ஆகியோர் பெயர்கள் சமூக அறிவியல் மற்றும் வரலாறு பாடப் புத்தகத்தில் உள்ளன. ஆனால் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நில உரிமையாளர்களுக்குத் தமிழர்கள் விற்கப்பட்ட வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டாமா?. மாணவர்கள் மத்தியில் எதைப் படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை
எனவே இளங்கலை அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் விடுதலை போராட்ட வரலாறு பாடங்கள் இடம்பெற வேண்டும். மேலும் பாடத்திட்டத்தில் விடுதலை போராட்ட வரலாறு பாடங்கள் இடம்பெறுவதைப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆண்டு தோறும் முனைவர் பட்டம் பெறும் மாணவர்களில் 5 சதவீத மாணவர்களே தரமிக்கவரகள்” எனப் பேசியுள்ளார்.