திருச்சியில் கடந்த 1999 ஆம் ஆண்டு கிளினிக்கில் இருந்து டாக்டர் ஸ்ரீதர் என்பவர் வீட்டுக்குச் சென்றபோது வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஜாகீர் உசேன், மூசா, ரஹ்மத்துல்லாகான், மதார் உள்ளிட்டோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள ரஹ்மத்துல்லாகான், மதார் ஆகிய 2 பேரை விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி அவரது தாயார் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சிறைக் கைதிகள் இருவரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு எடுத்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் 2 பேருக்கு இடைக்காலமாக 3 மாதம் பரோல் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு பரிந்துரைத்தும், ஆளுநர் ஆர்.என்.ரவி இது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடாமல் கிடப்பில் வைத்துள்ள நிலையில், உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.