சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கான அழைப்பிதழ் வெளியான உடனே தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.
இந்த சூழலில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி தின விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும், மக்களைக் கொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் கூறினார். இதற்கிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த விழாவில், பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘திராவிடம் நல் திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் நல் திருநாடு என்ற வார்த்தை விடுபட்டதற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அதிலும் முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
இந்த நிலையில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா தமிழ் பல்கலைக்கழக கரிகாலச் சோழன் அரங்கில் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையிலான நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் சர்ச்சை எழுந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடினார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சுவாமிநாதன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.