புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை இளைஞர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து வரவேற்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரமாண்ட சிவன் சிலையும் தலைமைப் புலவர் நக்கீரருக்கு சிலையும் கொண்ட கீரமங்கலம் ஒப்பிலாமணியம்பிகை உடனுறை மெய்நின்றநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகளுடன் பழனி பாதயாத்திரை பக்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் அன்னதானம் நடத்தப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் பிரமாண்ட சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தைச் சுற்றி வந்தனர்.
மேலும், குழந்தைகள் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர். அதே போல, செரியலூர் கிராமத்தில் உள்ள செரியலூர் - கரம்பக்காடு தீர்த்தவிநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து இளைஞர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகளும் நடந்தன.