தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் நேற்று கலைஞர் 100வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுகவினருக்கு அமைச்சர் பதவி முக்கியமா? சமூக நீதி முக்கியமா என்றால் சமூக நீதியே முக்கியம் என்று கூறுவார்கள். இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துவரும் மாநிலங்களில் முதன்மையானதாக விளங்குவது தமிழ்நாடு. இங்கிருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை. மாறாக பீகாரில் இருந்துதான் இங்கு பலர் வேலைக்கு வந்துள்ளனர். குறிப்பாக ஆளுநர் கூட பீகாரில் இருந்து இங்கு வந்துள்ளார்.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் பாலமாக திகழ வேண்டும். மாநில அரசு செய்யும் பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். ஆனால், இங்கு ஆளுநராக செயல்படுவர் 100 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நடைபெற்றதை போல் மீண்டும் இரட்டை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்” என்று பேசினார்.