தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதைப் பின்பற்றுவதே சிறப்பு எனப் பேசி இருந்தார். இதனையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து 19 கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி மனு செய்திருந்தார்.
இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்துப் பேசுகையில், “கடந்த ஆண்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநராக இல்லாமல் தனிப்பட்ட முறையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, ‘சனாதன தர்மம்தான் சிறந்த தர்மம், சனாதன தர்மத்தை தான் எல்லோரும் பின்பற்ற வேண்டும்’ எனப் பேசி இருந்தார். சனாதன தர்மத்தை யாரும் பின்பற்ற முடியாது. மனு தர்மத்தின் மறுபதிப்பு தான் சனாதன தர்மம். எனவே இந்த சனாதன தர்மத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சனாதன தர்மம் என்றால் என்ன. சனாதன தர்மத்தை கொண்டு வந்தது யார். சனாதன தர்மம் எந்த இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் சனாதன தர்மம் இடம் பெற்றிருக்கிறதா. இந்து மதம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடைய தலைவர் யார். இந்து என்றால் அதனுடைய பொருள் என்ன என்று 19 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.
சனாதன தர்மம் பற்றி பேசுபவருக்கு சனாதன தர்மம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். ஆனால் சனாதனம் குறித்து ஆளுநருக்கு தெரியவில்லை. அதே சமயம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சனாதனம் குறித்த 19 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேள்வி கேட்டால் குடியரசுத் தலைவராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லாமல் இருக்க முடியாது. அவ்வாறு பதில் சொல்லவில்லை என்றால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி கொடுக்கப்பட்ட கேள்விக்கு, இரண்டு மாதம் பதில் சொல்லாமல் இரண்டு மாதம் கழித்து இது குறித்த தகவல் ஆளுநரின் செயலகத்தில் இல்லை எனப் பதில் அளிக்கப்பட்டிருந்தது. இந்த பதிலில் திருப்தி இல்லாததால் மேல்முறையீடு செய்தேன். ஆனால் இதற்கு பதில் அளிக்கவில்லை. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக இரண்டு வாரங்களில் விளக்கம் அளிப்பதாக ஆளுநரின் துணைச் செயலாளர் கூறினார். இருப்பினும் சனாதனம் குறித்து ஆளுநர் நேரடியாகப் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.