இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள கோப்பை கிடப்பில் போட்டிருப்பதைக் கண்டித்தும், விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று 28ம் தேதி நடத்துகிறது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.
இது குறித்து த.மு.மு.க.வின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.விடம் நாம் பேசியபோது, “முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய பரிந்துரைத்துக் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி ஆளுநருக்குக் கோப்பு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, அக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வருகிறார். முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தை நடத்துகிறோம். மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களையும் கோப்புகளையும் நிலுவையில் வைத்துக் கொண்டிருப்பது ஆளுநரின் ஜனநாயக விரோதத்தைக் காட்டுகிறது” என்கிறார் ஜவாஹிருல்லா.
இவரது தலைமையில் நடைபெறவுள்ள இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ளவிருப்பதால் பாதுகாப்பைப் பலப்படுத்த காவல்துறை தயாராகி வருகிறது.