தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் அவர்கள் நியமிக்கப்பட்டது முதல் தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்து வருகிறது. பேராசிரியர் நிர்மலா தேவி பேசிய ஆடியோவில், மாணவிகளை பாலியல் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்ததும், அதில் கவர்னர் பெயரை சொல்லியிருப்பதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சர்ச்சை ஓய்வதற்க்குள் தி வீக் பத்திரிகையின் பெண் நிருபரை கண்ணத்தில் தட்டிக் கொடுத்திருப்பது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்விரு சம்பவங்களும் கவர்னரின் நன்மதிப்பை மக்கள் மத்தியில் குலைத்திருக்கிறது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காததும், தேர்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு போட்டியாக தன்னிச்சையாக ஆய்வுகளை நடத்துவதும் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்புகளையும் உருவாக்கியிருக்கிறது.
எனவே, தொடர்ந்து சர்சைகளில் சிக்கி வரும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.