தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கை பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தாலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாத தொமுச உள்ளிட்ட சங்க தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கி வரும் நிலையில், அனைத்து பேருந்துகளையும் இயக்க தற்காலிக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் 90% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் புதன் கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆங்காங்கே கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம், பேரணி, சாலை மறியல் செய்துள்ளனர். ஆலங்குடி பேருந்து நிலையத்திலிருந்து சந்தைப் பேட்டை நோக்கி முழக்கங்களுடன் பேரணியாகச் சென்ற தொழிலாளர்கள் வடகாடு முக்கம் வந்ததும் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களுக்கு அனுப்பி உள்ளனர். இதேபோல தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் போராட்டங்களும் கைதுகளும் தொடர்கிறது.