லட்சக்கணக்கான இளைஞர்களின் உயிரிழப்புக்குக் காரணமான குட்கா உற்பத்தி - விற்பனையை தடுக்கத் தவறிய பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், கோவை குட்கா ஆலை குறித்தும் சி.பி.ஐ. விசாரணை தேவை என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை சூலூரை அடுத்த கண்ணாம்பாளையத்தில் செயல்பட்டு வந்த குட்கா ஆலையை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து, அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பாக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை குட்கா ஆலைகள் தொடர்பான ஊழல் சர்ச்சை தீவிரமடையும் நிலையில், புதிய ஆலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கோவை குட்கா ஆலை ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. அந்த ஆலையில் எண்பதுக்கும் மேற்பட்ட வட இந்தியத் தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வந்துள்ளனர். இரவு நேரங்களில் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு அவற்றில் போதைப்பாக்குகள் ஏற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த செயல்கள் அனைத்தும் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால், இப்படி ஒரு குட்கா ஆலை செயல்பட்டு வந்தது இப்போது வரை காவல்துறையினருக்கு தெரியாது என்பது நம்பும்படியாக இல்லை.
கோவை குட்கா ஆலை 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக முதலில் வந்த செய்திகள் தெரிவிக்கும் போதும், அந்த ஆலை துல்லியமாக எவ்வளவு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது என்பது இனிமேல் தான் தெரியவரும். தமிழகத்தில் குட்கா எனப்படும் போதைப்பாக்குகளின் உற்பத்தி, இருப்பு, விற்பனை தடை செய்யப்பட்டு வரும் மே 8&ஆம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. குட்கா ஆலை 6 ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருந்தால், தடைக்கு முன்பாகவே முறைப்படி அனுமதி வாங்கித் தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய சூழலில் குட்கா தடை செய்யப்பட்டவுடன், அந்த ஆலையை உணவுப் பாதுகாப்புத் துறையினரும், காவல்துறையினரும் மூடி முத்திரையிட்டிருக்க வேண்டும். ஒருவேளை குட்கா தடை செய்யப்பட்ட பிறகு இந்த ஆலை திருட்டுத்தனமாக அமைக்கப்பட்டிருந்தால், அதை காவல்துறையினர் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் காவல்துறையின் தோல்வி அல்லது ஆட்சியாளர்களின் ஊழலாகத் தான் இருக்க வேண்டும். மேற்கண்ட இரண்டில் எது காரணமாக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதாகும்.
குட்கா விற்பனையைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவாக இருந்தாலும், அவரது வழியில் ஆட்சி செய்வதாக கூறிக்கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தாலும் மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய போது தான், குட்கா மற்றும் போதைப் பாக்குகளை தடை செய்வதற்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் தர (விற்பனை மீதான தடை மற்றும் கட்டுப்பாடு) ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட்டன. பின்னர் 2011ஆம் ஆண்டு இவை நடைமுறைக்கு வந்தன. இவ்விதிகளை பின்பற்றி 23 மாநிலங்களில் குட்கா தடை செய்யப்பட்ட பிறகும், தமிழ்நாட்டில் போதைப் பாக்குகள் தடை செய்யப்படாததை கண்டித்து பாமக சார்பில் எண்ணற்ற போராட்டங்கள் நடத்தப்பட்டன. போதைப் பாக்குகளை தடை செய்ய வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இருமுறை கடிதம் எழுதினார். அதன்பிறகே தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்டது.
ஆனாலும், தமிழகத்தில் குட்கா விற்பனை எந்த வகையிலும் தடுக்கப்படவில்லை. குட்கா விற்பனை செய்யும் வணிகர்களை கைது செய்யக்கூடாது என்று ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது உத்தரவுப்பிறப்பிக்கப்பட்டிருந்தது. அனைத்துக்கும் காரணம் ஊழல் தான். அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் அதிகாரிகள் வரை ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பதை குட்கா ஆலைகளில் வருமானவரித்துறையினர் நடத்திய ஆய்வில் கிடைத்த ஆவணங்கள் அம்பலப்படுத்தின. கோவை குட்கா ஆலையும் கூட ஆட்சியாளர்களுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டு, அவர்களின் ஆதரவுடன் தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும். கையூட்டு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவோ, குட்கா ஊழல் தொடர்பாக கோவை ஆலையில் ஏதேனும் ஆதாரங்கள் இருந்து அவற்றை அழிப்பதற்காகவோ மாவட்டக் காவல்துறை மூலமாக இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.
குட்கா பயன்படுத்துவதால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நலக் கேடுகள் கொஞ்சநஞ்சமல்ல. குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு சமூகத்தை சீரழிக்க துணை போனவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். தமிழக காவல்துறை விசாரணையில் இது சாத்தியமில்லை என்பதால் கோவை குட்கா ஆலை குறித்த வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். லட்சக்கணக்கான இளைஞர்களின் உயிரிழப்புக்குக் காரணமான குட்கா உற்பத்தி - விற்பனையை தடுக்கத் தவறிய பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.