கல்லீரல் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யக் கோரி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெற்றோருக்கு தமிழக அரசு தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதிக்கு அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கஸ்தூரி. இந்தத் தம்பதிக்கு 10 வயதில் முகேஷ்(10) என்கிற மகன் இருக்கிறார். அந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், முகேஷ் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு அடிக்கடி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் பழனி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் முகேஷின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மேல் சிகிச்சை செய்ய வேண்டும் என தனியார் மருத்துவமனை அதிகாரிகள் கூறியதையடுத்து, தங்களிடம் இருந்த ஆடு, மாடு, கோழி, நிலங்கள் என அனைத்தையும் விற்று கடந்த 20 நாட்களாக மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்து ரூ. 7 லட்சம் வரை செலவு செய்து சிகிச்சை அளித்துள்ளனர்.
அப்போது, முகேஷுக்கு வில்சன் காப்பர் என்னும் மர்ம நோய் தாக்கியதால் கல்லீரல் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரத்த சுத்திகரிப்பு செய்தால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், சிறுவனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்த போது சிறுவனின் உடல்நிலை மோசமாகவே உயர் சிகிச்சைக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறி மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுவன் முகேஷை பரிசோதித்த மருத்துவர்கள், இந்த மர்ம நோய்க்கான (வில்சன் காப்பர்) மருத்துவ சிகிச்சை இங்கு இல்லை. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். இதனால் மனம் நொந்துபோன மாரிமுத்து - கஸ்தூரி தம்பதியினர், தங்கள் மகன் முகேஷை அழைத்துக் கொண்டு பாறைப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்துவிட்டனர்.
இந்த நிலையில், தங்கள் மகன் முகேஷை காப்பாற்ற முடியாவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். தமிழக முதல்வரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் சிறப்புக் கவனம் செலுத்தி எங்கள் மகனை எப்படியாவது காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் எனவும், தங்கள் மகனுக்கு என்ன நோய் என்று இதுவரை தெரியவில்லை. ஒவ்வொரு மருத்துவர்களும் ஒவ்வொரு விதமாகக் கூறுகின்றனர். தமிழக முதல்வர் தலையிட்டு எனது மகன் உயிருடன் வாழ உயர் சிகிச்சையளித்து மீண்டும் நல்லபடியாக எங்களிடம் ஒப்படைக்க உதவ வேண்டும் எனவும் மாரிமுத்து - கஸ்தூரி தம்பதியினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த விஷயம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தெரியவர, உடனே அவர்கள் மூவரையும் சென்னைக்கு வரவழைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு சென்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூலமாக, சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறுவன் முகேஷ் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்கான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து முகேஷின் பெற்றோர்கள் கூறுகையில், “எங்க தொகுதியின் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் எங்களது மகனின் உடல்நிலை பற்றி கூறியதுடன் உடனடியாக சென்னைக்கு வரவழைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.
இது குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், “என் தொகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி தேவைப்படுவோர் அனைவருக்கும் உயர் மருத்துவ சிகிச்சையை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மக்களாட்சி அளித்து வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கலைஞரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆத்தூர் தொகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றி உள்ளது. அதுபோல முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் பல உயிர்களைக் காப்பாற்றி வருகிறது. 10 வருடங்களாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முறையாகச் செயல்படவில்லை. தற்போது மக்கள் நலன் காக்கும் திட்டமாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.