சென்னையில் கல்லூரி மாணவி ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கவனத்தில் கொண்டு பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என முக்குலத்துப் புலிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து முக்குலத்துப் புலிகள் அமைப்பின் தலைவர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 20 வயதான மகள் சத்ய பிரியா. தி.நகரிலுள்ள தனியார் கல்லூரியில் பி-காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அந்த மாணவியை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்கிற இளைஞர் ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், சதீஷின் டார்ச்சர் காரணமாக மாணவி மனவேதனையடைந்துள்ளார். இது குறித்து தனது குடும்பத்தினரிடமும் கூறி அழுது இருக்கிறார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் சதீஷை அழைத்துவந்து எச்சரித்து அனுப்பினர்.
அதனால் ஆத்திரமடைந்த சதீஷ், சில தினங்களுக்கு முன்பு மாணவி படிக்கும் கல்லூரிக்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அதுகுறித்தும் அந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் நின்ற மாணவியிடம் தகராறில் ஈடுபட்டு அப்போது அங்கு வந்த மின்சார ரயிலில் தள்ளி கொலை செய்து தனது காட்டுமிராண்டித்தனத்தையும் ஆணவப்போக்கையும் காட்டி நாட்டையே அதிரவைத்துள்ளார். தனது ஆசை மகளின் நிலையறிந்து மனமுடைந்த மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தது பெண்பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களையும், தமிழக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தமிழக அரசும், காவல்துறையும் மிக தீவிர நடவடிக்கை எடுத்து கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகள், அன்றாடம் வேலைக்கு செல்லும் பணிப்பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.