
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாய நிலங்களில் மின் கோபுரத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை முடியும் வரை திட்ட பணிகள் துவங்க கூடாது.
உயர் மின் அழுத்த கோபுரங்கள் விவசாய நிலங்கள் வழியாக அமைக்க கூடாது, சாலையோரங்களில் நிலத்திற்கு அடியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களிலே ஈடுபட்டார்கள்.
கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு கடந்த 3 நாட்களாக 8 இடங்களில் உண்ணாவிரதமிருந்து வருகிறார்கள். பல பேருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. ஆனால் தமிழக அரசு இதுவரை கண்டுக்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்கள். இன்னும் எத்தகைய போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வர வேண்டும். உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும்.
பேச்சுவார்த்தை முடியும் வரை மின் கோபுரம் அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கமாட்டோம் என்று அரசு உறுதியளிக்க வேண்டும். உண்ணாவிரதம் இருப்பது நம்முடைய விவசாயிகள் என்ற உணர்வுகளோடு இந்த பிரச்சினையை அணுக வேண்டும்.
தாமதப்படுத்தினால் விவசாயிகள் மாறுபட்ட தீவிர போராட்டங்களுக்கு தயாராகிவிடுவார்கள். இந்த நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் உண்ணாவிரதம் இருப்பவர்களுடைய உடல்நிலையை மேலும் சீரழித்துவிடக்கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.