மத்திய அரசின் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
‘அக்னிபத்’என்ற புதிய திட்டத்தின் கீழ், ராணுவத்துக்கு ஆள்சேர்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர். எனினும் அவர்களால் நான்கு ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணியாற்ற முடியும். அதன் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது. எனினும் துணை ராணுவப் படையில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது.
இந்நிலையில், திருச்சி ரயில்வே சந்திப்பில் திரண்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரயில்வே இருப்புப் பாதையில் அமர்ந்து தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவத்தில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘அக்னிபத்’ திட்டம் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை இருப்பு பாதையில் இருந்து அப்புறப்படுத்திய ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்தனர்.