
திருப்பதி அருகே செம்மரங்கள் கடத்த லாரியில் சென்றதாக 87 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு போலீசார் நாள்தோறும் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்றிரவு வழக்கம் போல் போலீசார் ரோந்து சென்ற போது, திருப்பதி கடப்பா சாலையில் தார்பாய் போட்டு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று செல்வதை கண்ட அவர்கள் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து சென்று ஆஞ்சநேயபுரம் வனத்துறை சோதனை சாவடியில் லாரியை நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அப்போது லாரியின் பின்புறம் தார்பாய் அடியில் 84 பேர் மறைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, வேலூர், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். கைதானவர்களிடம் ஆந்திர காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழர்கள் தாங்கள் மேஸ்திரி வேலைக்கு சென்றதாகவும், இவர்கள் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.