ஓசூர் அருகே, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள மோரணப்பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில், ஓசூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த கோவிந்தராஜூலு (45) என்பவர், கணிதப் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு, பள்ளி மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆசிரியர் கோவிந்தராஜூலு அந்தச் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்றும் புகார் எழுந்தது. அவரால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள், கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரகுராமனிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் முதல்கட்ட விசாரணை நடத்தியதில், ஆசிரியர் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர், ஓசூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின்பேரில் ஆசிரியர் கோவிந்தராஜூலு மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.
பாலியல் புகாரில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரம், கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.