சேலம் அருகே, அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆய்வக ஊழியர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் பாக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சேலம் இரும்பாலை அருகே கீரைப்பாப்பம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கருப்பூரைச் சேர்ந்த வீரவேல் என்பவர் ஆய்வக தொழில்நுட்புநராக பணியாற்றி வருகிறார். இவர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்கள் கிளம்பின. இந்நிலையில், டிச. 23ம் தேதி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் பள்ளியில் நடந்தது. அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்த வீரவேலை, அங்கிருந்த பெற்றோர் திடீரென்று தாக்கத் தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், பள்ளியின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று வீரவேலை மீட்டு, சேலம் நகர காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் அவர், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், சேலத்தாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சுரேஷ்பாபு (48) என்பவர், குடிபோதையில் பள்ளிக்கு வருவதாகவும், மாணவிகளை கழிப்பறை வரை பின்தொடர்ந்து சென்று கண்காணிப்பதாகவும் புகார்கள் வந்தன.
இது தொடர்பாக பொதுமக்கள் டிச. 23ம் தேதி பள்ளி முன்பு திரண்டனர். மேலும் சுரேஷ்பாபுவை வகுப்பறைக்குள் அடைத்து சிறை வைத்தனர். இதுகுறித்த விசாரணையில் சுரேஷ்பாபு, மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சூரமங்கலம் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் இவ்விரு வழக்குகளையும் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆய்வக தொழில்நுட்புநர் வீரவேல், ஆசிரியர் சுரேஷ்பாபு ஆகிய இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.