கிராமங்களில் கட்டமைப்பு, ஆட்சி நிர்வாகம் சீராக இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்ன அரசுப் பள்ளி மாணவி கௌரி லட்சுமணன் அது எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பெரிய அட்டவணை தயாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி ஆலோசனை சொல்லி இருந்தார். ஒரு அரசுப்பள்ளி மாணவியின் ஆலோசனையை ஏற்பதா என்று யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுபற்றி முதன்முறையாக நக்கீரன் இணையத்தில் மாணவியின் முழுமையான வீடியோ பேட்டியும் வெளியிட்டிருந்தோம்.
நீதிமன்றம் வரை சென்ற மாணவியின் ஆலோசனைகளைப் பரிசீலனை செய்ய கேட்டுக் கொண்டது நீதிமன்றம். இந்நிலையில் தான் மாணவியின் செயலை பாராட்டி ஐ நா சபை கடிதம் எழுதியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கலியராயன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் மகள் கௌரி. பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்11 ஆம் வகுப்பு படிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாகம் பற்றி ஆய்வு செய்து ஆய்வறிக்கையைப் பள்ளியில் மட்டுமின்றி அரசுகளுக்கும் அனுப்பியிருந்தார். அதேபோல கரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சாமானிய நாடுகள் அதனை எதிர்கொள்வது குறித்தும் அதனை மருந்துகளை மக்களுக்கு விநியோகிப்பது, தடுப்பது எப்படி என்பது குறித்தும் ஐ நா சபை தலைவருக்கு மாணவி கௌரி மார்ச் மாதம் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஐ நா சபை மாணவியின் செயலை பாராட்டப் பதில் கடிதம் எழுதியுள்ளனர். இது குறித்து மாணவி கௌரி கூறும்போது, ''அடிப்படையில் கிராம நிர்வாகம் சரியாக இருந்தால் தான் நாட்டின் வளர்ச்சியும் நிர்வாகமும் சரியாக இருக்க முடியும். அதனால் தான் ஒரு கிராம நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஆய்வு செய்து ஆய்வறிக்கையைக் கிராம ஆட்சியர் என்ற தலைப்பில் புத்தகம் தயாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கும், குடியரசுத் தலைவர் வரை அனுப்பினேன். யாரும் எந்த பதிலும் அனுப்பவில்லை. ஆனால் ஐ நா சபைக்கு அனுப்பிய ஒரு கடிதத்திற்கு எனக்குக் கடிதம் எழுதிப் பாராட்டியுள்ளனர். மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.