சிதம்பரம் அருகே கொள்ளிடம் கரை ஓரத்தில் திட்டுக்காட்டூர் மற்றும் கீழகுண்டலபாடி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்தக் கிராமம் கொள்ளிடக்கரை ஓரமாக உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இந்தக் கிராமம் மழை நீரால் சூழப்பட்டு பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் இவர்களின் குடியிருப்புக்கு செல்லும் வகையில் அரசு ரூ20 கோடி செலவில் மேல்மட்ட பாலம் அமைத்துள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் கீழகுண்டலபாடி கிராமத்தில் உள்ள பெ.ராசப்பா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இதில் மொத்தம் 81 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். தற்போது பள்ளி திறந்துள்ள நிலையில் உடல் நலத்தை பேணி காக்கும் வகையிலும் அறிவு திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வாடாமல்லி தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் சிவராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக சீர்காழி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் யாமினி அழகு மலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கேரம் போர்டு, பல்லாங்குழி, ஸ்கிப்பிங், பரமபதம், ரிங் பால், பில்டிங் வடிவமைப்பு, பிசினஸ் கார்டு, தாயம் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
மேலும் இந்தப் பள்ளிக்கு தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி கட்டிடத்திற்கு வண்ணம் தீட்டுதல், மாணவர்கள் அமர்வதற்கு பெஞ்ச், டேபிள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி, நூலக அறை, கழிவறை புனரமைப்பு மாணவர்களுக்கு சீருடை மற்றும் உணவு அருந்துவதற்கு எவர் சில்வர் தட்டு உள்ளிட்ட பல்வேறு விதமான அடிப்படை உதவிகளை இவர் அவர்களின் நண்பர்கள் உதவியை பெற்று செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டும் விதமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் செயலாளர், பள்ளி ஆசிரியைகள் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியைகள் ஜெயசித்ரா, புஷ்பா, சங்கீதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.