Skip to main content

“அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள்” - ராமதாஸ் வாழ்த்து!

Published on 24/12/2024 | Edited on 24/12/2024
ramadoss wishes Merry Christmas

அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; உலகம் முழுவதும் அமைதி தவழட்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கிறுத்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எதிரிகளை மன்னிப்பதற்குக் கற்றுக் கொடுத்த மகான் இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘நண்பர்களிடம் மட்டும் அன்பு காட்டினால் போதாது. எதிரிகளிடமும் அன்பு காட்ட வேண்டும். மனதார மன்னிக்க வேண்டும். யாராவது உங்கள்மேல் கோபமாக இருந்தால், உடனடியாக அவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்கள் உங்களிடம்  எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் நீங்கள் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென போதித்தவர் இயேசுபிரான்.

கிறித்துமஸ் கொண்டாடப்படுவதன் நோக்கங்களில் முதன்மையானவை மனிதருக்குள் நல்லுறவும், சமத்துவமும், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் உண்டாக வேண்டும்; பூமியில் உள்ளவர்கள் இணக்கமான சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்;  ஏழை, எளிய மக்கள் புதுவாழ்வு பெற வேண்டும்; இயற்கையை சுரண்டாமல் இசைந்து வாழும் தன்மை ஏற்பட வேண்டும் என்பன உள்ளிட்டவையாகும்.  இந்த நோக்கங்களுக்காகவே கிறித்துமஸ் திருநாளை மாதத்திற்கு ஒருமுறை கூட கொண்டாடலாம்.

உலகில் இன்று பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது; தொழில்நுட்பம் நாலுகால் பாய்ச்சலில் விரைந்தோடிக் கொண்டிருக்கிறது; மனிதர்களும் பணத்தையும், பொருளையும் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகில் அமைதிக்கும், மக்களிடையே மகிழ்ச்சிக்கும், சமூகங்களில் நிம்மதிக்கும் தான் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சிக்கலுக்கு சிறந்தத் தீர்வு அனைவரிடத்தும் அன்பு செலுத்துவது தான்.

இயேசுபிரான் விரும்பியதைப் போல, உலகில் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். அதன் மூலம் உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்; உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்தநாளில் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்