இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் இந்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் அமித்ஷாவை கண்டித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.வும் காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “அம்பேத்கர் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா கூறிய கருத்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் பெயரை சொன்னால் மோட்சம் கிடைக்காது என்ற மனுஸ்மிருதியின் கருத்தை பிரதிபலிக்கிறார்கள் என்று வெளிப்படையாக தெரிகிறது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். எப்படி செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதில் திரித்துக் கூறக் காங்கிரசுக்கு அவசியம் இல்லை” என்றார்.