விருத்தாசலம் பெரியார் நகரைச் சேர்ந்த விருத்தகிரி - சாவித்திரி தம்பதியின் மகன் மோகன்தாஸ். விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1976 முதல் 1980வரை 9ஆம் வகுப்பு முதல் 12 வகுப்புவரை படித்துள்ளார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்துள்ளார். சென்னை எம்ஐடியில் விருத்தாசலம் லைன்ஸ் கிளப் உதவியுடன் தனது உயர் கல்வியை முடித்த இவர், இந்தியக் கப்பற்படையில் சேர்ந்துள்ளார்.
இவரது சிறப்பான பணியால் இந்திய கப்பற்படையின் ரியர் அட்மிரலாக பதவி உயர்வு பெற்ற இவருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவின் கப்பற்படைத்துறையில் சிறப்பாகச் சேவையாற்றியதற்காக விசிட்ட சேவா விருது வழங்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் ஓய்வுபெற்ற மோகன்தாஸ் அவரது மனைவி தயாமோகன் மற்றும் பிள்ளைகள் சீனா மோகன், சித்தார் மோகனுடன் விருத்தாசலம் பெரியார் நகரில் வசித்துவருகிறார். இவரது மகனும் மகளும் தற்போது அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.
இந்திய கப்பற்படையில் அமைதி காலத்தில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான உயரிய படைத்துறை விருதான அதி விசிட்ட சேவா விருது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கப்பற்படையின் ரியர் அட்மிரலாக பணியாற்றி ஓய்வுபெற்ற மோகன்தாஸ்க்கு கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டத்தில், தலைவர் அருணாச்சலம், செயலாளர் வழக்கறிஞர் பாலச்சந்தர், பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் குடியரசுத் தலைவர் விருது பெற்ற முன்னாள் மாணவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மோகன்தாஸை பாராட்டினர்.