தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே கனமழை பெய்து வரும் நிலையில் இடி மின்னல் பாதிப்பும் அதிகமாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி கோகிலா (40). தான் வளர்த்து வந்த பால் மாட்டை வயல் பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். மதியம் திடீரென மழை பெய்யத் தொடங்கும் போது இடி மின்னலும் அதிகமாக இருந்ததால் மாட்டை வீட்டிற்கு ஓட்டிச் செல்ல கிளம்பியுள்ளார். அப்பொழுது திடீரென மின்னல் தாக்கியதில் கோகிலாவும் அவரது பால் மாடும் சம்பவ இடத்திலேயே பலியாகி கிடந்தனர். தகவல் அறிந்து சென்ற உறவினர்கள் கதறி அழுதனர். சம்பவம் குறித்து வருவாய் மற்றும் காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
இந்நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்த கோகிலாவின் குடும்பத்தினரை இன்று கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை, புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், திமுக வடக்கு மா.செ செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறி தமிழக அரசு பேரிடர் கால நிவாரணமாக ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.