தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில் வழக்கமாக திறக்கப்படும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் பெரும்பாலான நிலையங்கள், திறக்கப்படாமல் இருப்பதுதான் விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது. இதற்காக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்து போராட்டத்தில் இருந்த விவசாயிகளிடம் விசாரித்தோம், "பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிர் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் திருவிழாவிற்கு முன்பே அறுவடை செய்ய வேண்டிய கதிர்கள் அனைத்தும் போதிய அறுவடை இயந்திரங்கள் இல்லாமல் போனதால் படுத்துவிட்டது. ஒரு சில நாட்களுக்கு முன்பு லேசாக பெய்த மழையில் பயிர்கள் முளைத்துவிட்டது. இக்கட்டான சூழ்நிலையில் நெல் மணிகள் சாய்ந்துவிட்டதால் வயலில் கொட்டி பாதி அளவுதான் தேறுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள நெல் அறுவடை இயந்திரங்களை அதிகக்கூலி கொடுத்து அறுவடை செய்த நிலையில் நெல்லை விற்பதற்கு போதிய கொள்முதல்நிலையம் திறக்காமல் தவிக்கவிட்டுவிட்டனர்.
கும்பகோணம், நாச்சியார்கோவில், திருப்பந்துறை, வண்டுவாஞ்செரி, திருமங்கைச்சேரி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்துக்கொண்டு பனியிலும், வெயிலிலும் இரவு பகலாக பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அங்கேயே சாப்பிட்டுவிட்டு உறங்கும் நிலைமையாகிவிட்டது.
நெல் தூற்றும் மிஷின்களை மட்டும் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் இறங்கியுள்ளனர். ஆனால் கொள்முதல் அலுவலர்கள் இன்னும் நியமிக்காமல் உள்ளதால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்க முடியாமல் மிகுந்த சிரமத்தில் தவிக்கிறோம்," என்கிறார்கள்.
ஏன் கொள்முதல் நிலையங்கள் திறக்க தாமதம் என அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உண்டான பணத்தை உடனே கையில் கொடுத்து விடுவார்கள். அதில் கொள்முதல் நிலைய அதிகாரிக்கான கமிஷனை பிடித்துக்கொண்டு விவசாயிகளிடம் கொடுப்பார்கள். ஆனால் தற்போது விவசாயிகளிடம் சிட்டா அடங்கல் வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு வங்கியின் மூலம் வரவு வைத்து வருகின்றனர்.
இதனால் அதிகாரிகளுக்கு கிடைக்கும் வருவாயில் இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு விட்டது. நெல் கொள்முதல் செய்ய வரும் விவசாயிகளிடம் கமிஷனைக்கேட்டால் வந்ததும் தருகிறேன் என்கின்றனர், அதனால் கொள்முதல் செய்யப்படும் அதிகாரிகளுக்கு வருவாய் இல்லாமல் போனது ஒருபுறம் அதில் இழப்பீடு வந்தால், அதை கட்டுவதற்கு போதிய வருமானம் இல்லை. இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு செல்ல தயங்குகின்றனர். அரசு வழக்கப்படி மீண்டும் விவசாயிகளுக்கான பணத்தை அவர்கள் கையில் கொடுக்க வழிவகை செய்தால் தான் பயமின்றி வருவார்கள்," என்கின்றனர்.