வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் திங்கட்கிழமையான இன்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அத்தகைய கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்களோடு மாவட்டம் முழுவதுமிருந்து மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வருவார்கள். காலையிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மனு தருவார்கள்.
அதேபோல் மாவட்டம் முழுவதும் இருந்து படித்து வேலை இல்லாமல் வேலை தேடி; வேலை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பட்டதாரிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் குறைகளை மனுக்களாக வழங்குவதும் உண்டு. இந்த கூட்டத்துக்கு அனைத்து துறை அதிகாரிகளும் வந்து கலந்து கொள்ள வேண்டும். மனுக்கள் பெறும்போது மாவட்ட ஆட்சியருக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து கேள்விகள் எழுப்புவார். கடந்த வார மனுக்கள் குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவார்.
இந்த வாரம் வேலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ராமமூர்த்தி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு இருந்தார். பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் அமர்ந்து இருந்தனர். குறைகளைத் தீர்க்க வேண்டிய அலுவலர்கள் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் எதிரில் அமர்ந்து இருப்பது தெரிந்தும் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் செல்போன்களை நோண்டிக்கொண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் நேரத்தை வீணடித்துக்கொண்டு இருந்தனர். சிலர் குறட்டை விட்டு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இதனை மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.