உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கரோனா நோய்த் தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோவில் வளாகத்திலேயே நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் மத்தியில் நடைபெறுகிறது. இந்நிலையில், வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியைக் காண வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி மதுரை செல்லூரைச் சேர்ந்த 62 வயது முதிய பெண்மணி ஜெயலட்சுமியும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள கோகிலாபுரத்தைச் சேர்ந்த 42 வயதான செல்வம் என்பவரும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதலமைச்சர் ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
செல்வத்திற்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இருவரும், தேனி அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்துவருகின்றனர். இதில், செல்வத்தின் மூத்த பெண் குழந்தை 10-ஆம் வகுப்பும், இளைய மகன் 1-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். கள்ளழகரை வணங்குவதில் மிகுந்த விருப்பம் கொண்ட செல்வம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல், சித்திரைத் திருவிழாவில் பங்கேற்பது வழக்கமாக வைத்துள்ளார். நண்பர்களோடு வந்துவிட்டு, உடனடியாக தேனி திரும்பிவிடுவாராம். அதேபோல் தான் கடந்த 15ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் தேனியிலிருந்து புறப்பட்டு மதுரை வந்தவர், வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியைக் காண சென்றுள்ளார். அப்போது தான் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துள்ளார்.
உயிரிழந்த செல்வத்தின் மனைவி, “எனது கணவர் உத்தமபாளையம் அருகேயுள்ள கோகிலாபுரத்தில் தையல்கடை நடத்தி வந்தார். அந்த வருமானத்தில்தான் நானும் என் குழந்தைகளும் வாழ்ந்து வந்தோம். எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்த நிலையில் எங்கள் குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது. என் குழந்தைகளைக் காப்பாற்ற என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை” என கவலையில் கண்ணீர்விட்டு அழுதார்.
மேலும் செல்வம் மனைவியின் உறவினர் நாகேந்திரன் கூறுகையில், “தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை சற்றே ஆறுதல் அளித்தாலும், குழந்தைகள் இருவரின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு, 8-ஆவது வரை படித்துள்ள அவரது மனைவியின் கல்வித் தகுதிக்கேற்ற வேலையினை அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் அவருடைய குழந்தைகளை அவரால் காப்பாற்ற முடியும். தமிழக முதல்வர் ஸ்டாலின் கருணையோடு இதனைப் பரிசீலிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.