திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை சார்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ‘கல்லூரி கனவு’ எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள ஜி.டி.என் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், 12ம் வகுப்பு முடித்து அடுத்ததாக உயர்கல்வி என்ன படிக்க வேண்டும் தொடர்பான ஆலோசனை பெற மாவட்டம் முழுவதும் இருந்து 3,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு 38 மாவட்டங்களில் இல்லாத பெருமை நமது திண்டுக்கல் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் புதிதாக ஆறு கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பயில வேண்டுமென்றால் வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நமது மாவட்டத்திலே அதற்கான கல்லூரிகள் உள்ளன. அடுத்த வருடம் நத்தத்தில் புதிதாக கல்லூரி துவங்கப்படும்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு ஆயக்குடியில் தனியார் நடத்தும் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. மேலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்கள் சென்னை சென்று படிக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது. ஏழை எளிய மாணவர்களும் பயிற்சி பெற்று தேர்வு எழுதும் வகையில், இந்த ஆண்டு நமது மாவட்டத்திலேயே விரைவில் இதற்கான பயிற்சி மையம் ஆரம்பிக்க இருக்கிறோம்.
அகாடமிகள் சென்னையில் எப்படி இருக்கிறதோ அதேபோல் மிகவும் திறன் பெற்ற கல்லூரி பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், விஞ்ஞானிகளை இங்கு வரவழைத்து தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் வகையில் பெரிய அளவில் பயிற்சி மையம் திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்க இருக்கிறோம். தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பள்ளி மாணவ மாணவிகளுக்கு குறியீடு மட்டும் ரோபோ முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களை கொண்டு கோடைகாலத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்” என்று கூறினார்.