கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் உதவிகளைச் செய்யுமாறு கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன் அடிப்படையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க சார்பில் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் பல்வேறு வகையிலான அடிப்படை தேவைகள் குறித்தும் கோரிக்கைகள் பெறப்பட்டு, அந்தக் கோரிக்கைகள் மாவட்டம் முழுமைக்கும் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மேற்கு மாவட்டச் செயலாளர் வெ.கணேசன், தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், திமுக எம்.எல்.ஏ.க்கள் நெய்வேலி சபா.ராஜேந்திரன், புவனகிரி துரை.கி.சரவணன் ஆகியோர் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு கோரிக்கை மனுக்களைத் தயார் செய்தனர். அந்தக் கோரிக்கை மனுக்களைக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் நேரில் வழங்கி அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் "திமுக தலைவர் ஸ்டாலினின் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி பாகுபாடின்றி உதவிகளைச் செய்து வருகிறோம். தொலைபேசி வாயிலாக தமிழகத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடமிருந்து உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளது. ஊரடங்கு தொடங்கிய காலத்திலிருந்து வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத உதவிகளை திமுக செய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் தொலைபேசி வாயிலாக 3,370 பேரிடம் இருந்து உதவிகேட்டு அழைப்பு வந்துள்ளது. அவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி மூன்று நாட்களில் கரோனா நோய்க் கட்டுப்படுத்தப்படும் எனக் கூறி நிலையில் மூன்று வாரங்களைக் கடந்துவிட்டது. ஆனால் இப்போதுதான் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் நோயைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். இந்நோயின் அச்சத்தால் மக்கள் மரண பீதியில் வாழ்கின்றனர். தமிழக சுகாதாரத் துறையின் அலட்சியமான செயல்பாடு, சமூக இடைவெளியில்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வருகிறது. எனவே அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்பட வேண்டும்" என்றார்.