தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி, டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், லட்சக்கணக்கில் பணம் சிக்கியது. அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நோயாளிகளை ஒரு பொருட்டாக மதிப்பார்கள் என்பதை இந்த சோதனை உறுதிப்படுத்தும் நிலையில், மருந்து, மாத்திரைகள் கொடுக்கும் பிரிவில் மக்களிடம் எரிந்து விழுவதாக புகார்வர, சிவகாசி அரசு மருத்துவமனை சென்றோம்.
மாத்திரைகள் வாங்குவதற்கு ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்றனர். “இங்கே வேலை பார்க்கிறவங்க எங்களை மனுஷனா மதிச்சாத்தான? மாத்திரையை கையில கொடுக்க மாட்டாங்க. தூக்கி வீசுவாங்க. இப்ப பதினஞ்சு நிமிசமா நிக்கிறோம். அவங்க இஷ்டத்துக்கு கடலை போட்டுக்கிட்டிருக்காங்க.” என்று முனகினார் மனோகரன் என்ற நோயாளி. பெண்கள் வரிசையிலும் “இங்கேயும் கவுன்டர்ல ஆள் இல்ல..” என்று குரல் கொடுத்தனர். நாம் எட்டிப் பார்த்தோம். ஆண் ஊழியர்கள் மூவரும் பெண் ஊழியர்கள் இருவரும் கையில் டீ கப்புடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். ‘டீ குடிச்சிட்டீங்களா? நிற்க முடியாத நோயாளிகள் ரொம்ப அவஸ்தைப் பட்டுக்கிட்டிருக்காங்க. சீக்கிரம் வந்து மருந்து மாத்திரையைக் கொடுங்க.’ என்றோம். நாம் இப்படி சொன்னதும், அவர்களிடமிருந்து எதிர்ப்புக்குரல் வந்தது. அவர்களில் ஒருவர் “எதுக்கு சவுண்ட் விடறீங்க? நாங்க இன்னும் டீயை குடிச்சி முடிக்கல. டாக்டர் டீ குடிச்சிக்கிட்டிருந்தா இந்தமாதிரி அவர்கிட்ட கேள்வி கேட்பீங்களா?” என்றார் எரிச்சலுடன். ‘இல்லீங்க.. 15 நிமிஷத்துக்கு மேலாவா டீ குடிக்கிறது? கவுன்டரில் ஆள் மாற்றிவிட்டு டீ குடிக்கலாம்ல?’ என்று நாம் கூறியதும் “போங்க யாருகிட்ட வேணும்னாலும் கம்ப்ளைன்ட் பண்ணிக்கங்க. என் பேரு ராஜாசிங்..” என்றார் தெனாவெட்டாக.
சிவகாசி அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி திருமுருகானந்திடம் ‘தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை இப்படி அலட்சியமாகவோ அவமரியாதையாகவோ நடத்த மாட்டார்கள் அல்லவா?’ என்று கேட்டவுடன், விறுவிறுவென்று நம்மையும் அழைத்துக்கொண்டு மருந்து கொடுக்கும் இடத்துக்குச் சென்றார். அவரிடமும் அந்த ராஜாசிங் “சார்.. இவரு ரொம்ப கேள்வி கேட்கிறாரு?” என்று நம்மைக் காட்டினார்.
மருத்துவ அதிகாரி திருமுருகானந்த் அங்கிருந்த ஊழியர்களிடம் “பப்ளிக்கிட்ட இருந்து கம்ப்ளைன்ட் வராம பார்த்துக்கங்க. டீ குடிங்க. ஆனா.. நோயாளிகள் க்யூவுல நிற்கும்போது கவுன்டர்ல ஒருத்தர் கட்டாயம் நிற்கணும். சேவை மனப்பான்மையுடன் வேலை பாருங்க.” என்று அறிவுறுத்தினார்.
மருத்துவத்துக்கு செலவழிப்பதற்கு வசதியில்லாத ஏழை மக்களே அரசு மருத்துவமனைகளைத் தேடி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தில்தான் நாம் ஊதியம்பெறுகிறோம் என்பதை அரசு மருத்துவமனையில் பணிபுரிவர்கள் நினைவில்கொள்ள வேண்டும். ‘நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்..’ என்று நோயாளிகள் நொந்துபோய் விமர்சிக்கும் அளவுக்கு நடந்துகொள்ளக் கூடாது.