
பொள்ளாச்சி, கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன். இவர் ஆனைமலை கிழக்கு ஒன்றிய அ.ம.மு.க செயலாளராக செயல்பட்டு வந்தார்.
இவர், தி.மு.க.வில் இணைய கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ் ஆகியோர் மூலமாக கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது தலைமையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
இதனையடுத்து நேற்று தனது சொந்த ஊரான கங்கம்பாளையம் வந்தபொழுது தி.மு.க.வினர் சார்பில் சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க.வினர் நேற்று இரவு 9.30 மணியளவில் வீரப்பன் வீட்டில் இல்லாதபோது, அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. ஆனைமலை ஒன்றிய பொருளாளர் வரதராஜ், பெத்தநாயக்கனூர் ஊராட்சி தலைவர் ஜெகநாதன், கோபால் உட்பட 30க்கும் மேற்பட்டோர் வீரப்பன் வீட்டிற்கு வந்து தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொள்வதாக பேசியுள்ளனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்த அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் காலையில் வருமாறு தெரிவித்துள்ளனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க.வினர் அங்கிருந்த அவரது ஆதரவாளர்களை சரமாரியாக அரிவாள் மற்றும் பீர் பாட்டிலில் தாக்கினர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களை மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், யுவராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் காலந்தாழ்த்தி வருவதாகவும் வழக்குப்பதிவு செய்ய மறுத்தால் ஸ்டாலின் அனுமதி பெற்று திமுக சார்பில் கோட்டூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்கள்.