
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் 108 ஆம்புலன்ஸ் வந்து சம்மந்தப்பட்ட நபரை அழைத்து செல்லும். முழுமையாக பாதுகாப்பு உடைகள் அணிந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அழைத்து சென்று சம்மந்தப்பட்ட கரோனா சிகிச்சை மையங்களில் இறக்கிவிட்டு செல்கின்றனர். ஆனால் அந்த ஊழியர்களுக்கு போதிய தனிமைப்படுத்தல் இல்லை. அதேபோல சிகிச்சை முடிந்த பிறகு அவர்களை அவர்களின் வீட்டிற்கே கொண்டு போய் விட்டு வந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி அழைத்து வருவதுடன் திருப்பி கொண்டு போய்விட போதிய ஆம்புலன்ஸ் இல்லாததால் மருத்துவமனை வாசலிலேயே காத்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை ராணியார் கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் கூறும்போது, கடந்த வாரம் கரோனா தொற்று என்று சிகிச்சைக்கு அழைத்து சென்றார்கள். சிகிச்சை முடிந்தது, வீடு திரும்ப வேண்டும். வழக்கம் போல எங்களை அழைத்து வந்த வாகனத்தில் ஏற்றி சென்று வீட்டில் விடுவார்கள் என்று துணிமணிப் பைகளை எடுத்துக்கொண்டு காத்திருந்த நேரத்தில்தான் சொன்னார்கள், உங்களை ஏற்றிச் செல்ல வாகம் இல்லை அதனால் உங்கள் உறவினர்களை அழைத்து எப்படியாவது ஊருக்கு போங்கள் என்று. (அதாவது கரோனா தொற்று உற்றவர்களை ஏற்றவே வாகனம் பற்றாக்குறை உள்ளதை உணர்ந்தோம்.)
ஒரு ஆட்டோவில் போக கூட வழியில்லை. கரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் என்றதுமே எங்களை ஏற்ற மறுக்கிறார்கள், காரும் அப்படித்தான். அதனால் பல மணி நேரம் காத்திருந்து ஊருக்கு தகவல் சொல்லி உறவினர்களும் எங்களை ஏற்றி செல்ல பயந்து கால தாமதம் செய்து பிறகு வந்து ஏற்றி சென்றார்கள்.
இப்படித்தான் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கறம்பக்குடியில் இருந்து ஒரு இளம் பெண்ணை தொற்று உள்ளது என்று ஆம்புலன்சில் ஏற்றி வந்து பிறகு அவருக்கு இல்லை என்றதும் இரவு 10 மணிக்கு மருத்துவமனைக்கு வெளியே போக சொல்லிவிட்டார்கள். அந்த இளம் பெண் சொந்த ஊருக்கு போக வழியின்றி அழுதும் பயனில்லை. கரோனா வாகனத்தில் வந்ததால் உறவினர்கள் கூட ஏற்ற மறுத்துள்ளனர். அதிகாலை 2 மணிக்கு பிறகு 30 கி.மீ செல்ல ரூ. 10,000 வாடகை பேசி ஒரு கார் ஏற்பாடு செய்து அதிகாலை 3 மணிக்கு கறம்பக்குடி சென்றுள்ளார்.
வசதி இல்லாத பலரும் நடந்துதான் ஊருக்கு வரவேண்டிய நிலை உள்ளது. அதனால் கரோனா தொற்று உள்ளவர்களை 108 ஆம்புலன்ஸ் ஏற்றி சென்றாலும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்பவர்களை தனியார் மருத்துவமனை மற்றும் தன்னார்வ ஆம்புலன்ஸ்கள் ஏற்றி சென்று, வீட்டில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.
மாவட்ட நிர்வாகம் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரிகளிடம் பேசி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்வோரை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.