“உங்களுக்கு அவ்ளோ அவசரம் என்றால் தனியார் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க” என அரசு மருத்துவமனைக்கு வந்த மாணவனை வேண்டுமென்றே அலைக்கழித்த செவிலியர்களின் செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முத்துராஜா தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மணிகண்டன். இவருடைய மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், அந்த மாணவன் தான் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களுடன் சேர்ந்து பாட பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கியிருந்த இரவு நேர உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தெரிந்துகொண்ட பள்ளி நிர்வாகம், மாணவர்களுடைய நலன் கருதி அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என பெற்றோர்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் மணிகண்டன் தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவம் பார்ப்பதற்கு சென்றுள்ளதாகத் தெரிகிறது. அப்போது, அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த மூன்று செவிலியர்கள், மாணவனை கவனிக்காமல் அரட்டையடித்துக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து விரக்தியடைந்த மணிகண்டன், தன்னுடைய மகனுக்கு உரிய சிகிச்சை வழங்குங்கள் எனக் கேட்டுள்ளார்.
அப்போது அந்த செவிலியர்கள், “உங்களுடைய மகனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே இங்கு சிகிச்சை அளிக்கப்படும்” எனக் கூறியதுடன், “உங்களுக்கு அவசரம் என்றால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்” என்று அஜாக்கிரதையாக பதில் கூறியுள்ளார். இதைக் கேட்டு திகைத்துப் போன மணிகண்டன், தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். அதன்பிறகு, இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிப்பதற்காக, அவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், அவர் அழைப்பை எடுக்காததால், மணிகண்டன் தன் மகனுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அதே சமயம், செவிலியர்களின் அஜாக்கிரதையான செயலால் தன் வேதனையை வெளிப்படுத்திய மணிகண்டன், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.